மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. நவம்பர் 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்தது. பாஜக மட்டுமே 132 தொகுதிகளை கைப்பற்றி வியப்பை ஏற்படுத்தியது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதியில் உத்தவ் தாக்கரே சிவசேனா 20, காங்கிரஸ் 16, என்சிபி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்ற குழப்பம் இன்று வரை நீடித்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க வேண்டும் என்று அவரது கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதேபோல, தேவேந்திர பட்னாவிஸ் தான் அடுத்த முதல்வர் என்று பாஜக ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டவும் தொடங்கிவிட்டனர்.
ஆனால், பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா மற்றும் பாஜக மூத்த தலைவர் ராவ்சாகேப் தன்வே ஆகியோர் சிவசேனாவினரின் விருப்பத்துக்கு மறுப்பு தெரிவித்ததோடு, ''பாஜகவின் நாடாளுமன்றக் குழுவும், மூன்று கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களும் அமர்ந்து இது குறித்து முடிவெடுப்பார்கள்'' என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதையும் படிங்க: 'ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்'.. பத்திரிகையாளர் முகமது சுபைருக்கு கனிமொழி ஆதரவு குரல்!
இந்த பரபரப்பான சூழலில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இன்று மாலை 4 மணிக்கு டெல்லிக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மகாயுதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தி இன்றைக்கே முதல்வர் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும், பாஜக, சிவசேனா மற்றும் என்சிபி இடையே அமைச்சரவை பதவிகளை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 4 மணிக்கு டெல்லி செல்லும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் மாலை 6 மணி அளவில் அமித் ஷாவை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு மகாராஷ்டிரா முதல்வர் யார் என்பது அதிகாரபூர்வமாக தெரிந்துவிடும்.
துணை முதல்வர் பதவி
இதுவரை பாஜக சார்பில் இருந்தே முதல்வர் அறிவிக்கப்படுவார் என்ற நிலை இருந்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில், துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ஏற்க வாய்ப்பில்லை என்று சிவசேனாவின் எம்எல்ஏவும், செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ஷிர்சத் பிடிஐ செய்தியிடம் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து சஞ்சய் ஷிர்சத், ஏற்கனவே முதலமைச்சராக பணியாற்றிய ஒருவருக்கு துணை முதல்வர் பொறுப்பு பொருந்தாது என்றும் இருப்பினும் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் அங்கம் வகிப்பார் எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றொரு தலைவரை துணை முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கும். முதல்வர் விவகாரத்தில் பாஜக தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஷிண்டே கடந்த புதன்கிழமை அன்றே கூறிவிட்டார். எனவே ஆட்சி அமைப்பதில் அவர் தடையாக இருக்க மாட்டார் என்றும், முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ள வலியுறுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்