மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் எலக்ட்ரிக் பைக்கிற்கு (மின்சார வாகனம்) சார்ஜ் ஏற்றிய போது, ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முன்னாள் எம்பியும், சத்திரபதி சம்பாஜிநகர் தொகுதி சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் எம்பி வேட்பாளருமான சந்திரகாந்த் கைரே இவ்விபத்தில் உயிரிழந்த 7 பேருக்கும் தனது இரங்கல் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ரம்ஜான் மாதத்தில் நடந்த துரதிஷ்டமான சம்பவம் இது. ரம்ஜான் பண்டிகையையொட்டி, நோன்புக்காக இஸ்லாமிய சகோதரர்கள் இருவர் அதிகாலையில் எழுந்துள்ளனர்.
ஆனால், துரதிஷ்டமாக இவ்விருவரும் எழுந்திருப்பதற்கு முன்னதாகவே, இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளியே தப்பித்துச் செல்ல முடியாத அளவிற்கு ஒரே புகைமூட்டம் பரவியுள்ளது. இதனால், தப்பிக்க முடியாமலும், மூச்சுத்திணறியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தைக் கண்ட சச்சின் துபே என்பவர் இது தொடர்பாக கூறுகையில், 'சரியாக அதிகாலை 3.30 மணிக்கு இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது. முதலில் துணிகளில் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. வீட்டில் குளிரூட்டியை பயன்படுத்தி வந்ததால், இந்த சத்தம் அவர்களுக்கு கேட்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.
மூன்று மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளனர். முதல் தளத்தில் அதன் உரிமையாளர் தனது குடும்பத்தினருடன் ஒத்திக்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சில குழந்தைகள் உள்ளிட்ட இரண்டு பெண்கள் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.