கோட்டா: ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள குன்ஹாடி பகுதிக்கு உட்பட்ட சகத்புராவில், இன்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழா ஊர்வலத்தின்போது, 18 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்து தீக்காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பான தகவல் குன்ஹாடி போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த குழந்தைகளை மீட்டு, எம்பிஎஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதில் ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் 15 குழந்தைகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அமைச்சர் ஹிராலால் நாகர் ஆகியோர் மருத்துவமனையில் காயமடைந்த குழந்தைகளைச் சந்தித்து, காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க மருத்துவரிடம் ஆலோசனைகளை வழங்கினர்.
இது குறித்து குன்ஹாடி துணை காவல் ஆய்வாளர் ரயீஸ் அகமது கூறுகையில், "இந்த ஊர்வலத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்தனர். மேலும், குழந்தைகளின் கைகளில் கொடிகளை வைத்திருந்தனர். அது அப்பகுதி வழியாகச் செல்லும் உயர் அழுத்தக் கம்பியைத் தொட்டதால், குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்து தீக்காயம் ஏற்பட்டது” என தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து ஐஜி ரவி தத் கவுர், மாவட்ட ஆட்சியர் ரவீந்திர கோஸ்வாமி, எஸ்பி அம்ரித் துஹான் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி அய்யா வைகுண்டர் பற்றி பேசிய கருத்துகளுக்கு கிளம்பிய எதிர்ப்புகளும், ஆதரவுகளும்!