டெல்லி: இந்திய அரசியல் கட்சிகள் ஒருவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால், அதன் முழு விவரத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டத்தை திருத்தி, தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை பாஜக அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் மூலம், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர், நிறுவனங்கள் வங்கியில் இருந்து எத்தனை தேர்தல் பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.
நன்கொடை அளித்தவரின் பெயர் மற்றும் முகவரி அதில் இடம்பெறாது. அதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை. தேர்தல் பத்திரத்தை பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே, இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கின் விசாரணை முழுவதுமாக முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு நவ.2ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இவ்வழக்கிற்கான தீர்ப்பு இன்று (பிப்.15) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் இன்று ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர். இத்தீர்ப்பு மத்திய அரசிற்கு பெரும் அடியாக அமைந்துள்ளது. இவ்வழக்கில், தேர்தல் பத்திரம் திட்டம் அரசியலமைப்பின் 19 (1) (A) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறுவதாகும்.
தனியுரிமைக்கான அடிப்படை உரிமையில், குடிமக்களின் அரசியல் தனியுரிமை மற்றும் இணைப்புக்கான உரிமையும் அடங்கும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் வருமான வரிச்சட்டங்கள் உள்பட பல்வேறு சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்கள் செல்லாது. தேர்தல் பத்திரங்கள் கைமாறு ஆதாயங்களுக்கு வழி வகுக்கும். பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எதிராக அமையும்.
கட்சிகளுக்கு யார் நன்கொடை கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய, தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன. அரசை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என பல்வேறு தருணங்களில் நீதிமன்றம் கூறியுள்ளது. தனியார் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளையும், அரசாங்கத்தையும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நிலை உருவாகும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர்.
மேலும், வங்கிகள் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 2019 ஏப்ரல் 12ஆம் தேதி முதல் இன்று வரை பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய அனைத்து பங்களிப்பு விவரங்களையும் மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதையும் படிங்க: "அயோத்தியின் மகிழ்ச்சி இங்கு உள்ளது" - அபுதாபி இந்து கோயில் திறப்பிற்குப் பின் பிரதமர் மோடி பேச்சு!