டெல்லி : சண்டிகர் மேயர் தேர்தல் குதிரைப் பேரம் போன்று நடைபெற்று உள்ளதாகவும், வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடந்த நாளில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வீடியோக்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதை பத்திரமாக டெல்லிக்கு எடுத்து வர நீதித்துறை அதிகாரியை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
பஞ்சாப் மற்றும் அரியனாவின் தலைநகராக செய்லபட்டு வரும் சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டனர்.
இதில்,பாஜக சார்பில் போட்டியிட்ட மனோஜ் சோன்கருக்கு 16 வாக்குகளும், இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு 20 வாக்குகளும் கிடைத்தன. இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலை நடத்திய அதிகாரி அனில் மசிஹ், இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்தார்.
இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிட்ட மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஆம் ஆத்மி கட்சியினர், பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கு, பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதனிடயே வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரி அனில் மசிஹ், வாக்குச்சீட்டுகளில் திருத்தம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை சீர்குலைத்திருப்பது வெளிப்படையாகத் தெரிவதாகவும் ஜனநாயகத்தை படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே, தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள், தேர்தல் நடைமுறை பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்,
மேலும், தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டனர். இந்நிலையில், இன்று (பிப்.19) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனிடையே சண்டிகர் மேயர் பதவியை பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்தார். தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், தலைமை நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் மீது நடவடிக்கை எடுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், சண்டிகர் மாநாகராட்சிக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டனர். மேலும், சண்டிகர் நிர்வாகம் எந்த கட்சி பின்னணியும் இல்லாத நபரை தேர்தல் அலுவலராக அறிவித்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
இதையும் படிங்க : தேசியவாத காங்கிரஸ் கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!