பாட்னா: மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். 40 மக்களவை தொகுதிகளை கொண்ட பீகாரில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஜனதா தள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
கடந்த மார்ச் 18ஆம் தேதி பீகார் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு நடைபெற்ற நிலையில், இதில் பாஜகவுக்கு 17 இடங்களும், நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சிக்கு 16 இடங்களும் ஒதுக்கப்பட்டன. மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகனும், நடிகருமான லோக் ஜன்சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வானுக்கு 5 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் போட்டியிட்டு வென்ற ஹஜிபூர் தொகுதியையும் சிராக் பஸ்வானுக்கு பாஜக ஒதுக்கி உள்ளது. மேலும், ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவம் மோர்ச்சா மற்றும் உப்பேந்திர குஷ்வாஹாசின் ராஷ்டிரிய லோக் சம்தா கட்சிக்கும் தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதில் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராசின் ராஷ்டிரிய லோக் ஜன்சக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சியுடன் கூட்டணி வைத்ததை தொடர்ந்து தனது கட்சி புறக்கணிக்கப்பட்டதாக பசுபதி குமார் பராஸ் கடுமையாக பாஜகவை சாடினார். இந்நிலையில், இன்று (மார்ச்.19) தனது மத்திய அமைச்சர் பதவியை பசுபதி பராஸ் ராஜினாமா செய்து உள்ளார்.
முன்னதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பசுபதி குமார் பராஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து விரைவில் பசுபதி குமார் பராஸ் இந்தியா கூட்டணியில் இணைவார் என தகவல்கள் பரவின. இதன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் ஜன்சக்தி கட்சியை, பாஜக கழற்றிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
விரைவில் பசுபதி குமார் பராஸ், இந்தியா கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜன தளத்துடன் கூட்டணி அமைத்து 5 இடங்கள் வரை பசுபதி குமார் பராஸ் கேட்க உள்ளதாகவும் கடந்த முறை வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களை இந்த முறையும் அதே தொகுதிகளில் போட்டியிட வைக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா! என்ன காரணம்? ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகலா?