கொல்கத்தா: இளம் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், கைது செய்யப்பட்ட போலீஸ் தன்னார்வலர் சஞ்சய் ராய் ஒருவர் மட்டும்தான் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரே நபர் என்றும் அவருக்கு எதிராக டிஎன்ஏ, ரத்த மாதிரிகள் உள்ளிட்ட 11 ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை வெளியான இந்த தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ , விசாரணை நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தகவல்களை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இளம் பெண் மருத்துவரின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் டிஎன்ஏ இருந்தது தெரியவந்துள்ளது. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மூன்றாவது மாடியில் இளம் பெண் மருத்துவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அறைக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி-9ஆம் தேதிக்கு இடைப்பட்ட நேரத்தில் சஞ்சய் ராய் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை..
இளம் பெண் மருத்துவர் அறைக்குள் ப்ளூ டூத் ஹெட் செட்டை கழுத்தில் போட்டிருந்த படி அவர் செல்லும் வீடியோ பதிவுகள் உள்ளன. சஞ்சய் ராயின் மொபைல் போன் சிக்னல் ஆய்வுகளும் குறிப்பிட்ட நேரத்தில் அவர் அங்கே இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவர் திரும்பி வரும் போது பதிவான வீடியோ காட்சிகளில் அவர் கழுத்தில் மாட்டியிருந்த ப்ளூ டூத் ஹெட் செட் இல்லை. அது இளம் பெண் மருத்துவர் அறையில் இருந்து போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர அந்த அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிறிய அளவிலான முடிக்கற்றைகள் சஞ்சய் ராயின் தலையில் இருந்து விழுந்தவை என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பிரேத பரிசோதனையின் போது இளம் பெண் மருத்துவர் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் டிஎன்ஏ இருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர சஞ்சய் ராய்க்கு எதிராக போராடியபோது இளம் பெண் மருத்துவர் காயமுற்றதால் அவரது ரத்தம் சஞ்சய் ராயின் ஜீன்ஸ் பேண்ட்டில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சஞ்சய் ராயின் செருப்புகள் உள்ளூர் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கையால் கழுத்தை நெரித்தல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவே இளம் பெண் மருத்துவரின் மரணத்திற்கான காரணம் என்றும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.