புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் 26ஆவது ஆளுநராக வருவாய்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் 25ஆவது ஆளுநராக இருக்கும் சக்தி காந்ததாஸ் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. எனினும் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக அவர் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது பதவி காலம் வரும் 10ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதனிடையே புதிய ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் குறித்து வெளியிடப்பட்ட மத்திய அரசின் உத்தரவில், "அமைச்சரவையின் நியமன குழுவானது, மத்திய வருவாய்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 11ஆம் தேதி முதல் மூன்று ஆண்டு காலத்துக்கு சஞ்சய் மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்பார்,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்களா? கலெக்டர் விளக்கம்!
சஞ்சய் மல்ஹோத்ரா ராஜஸ்தான் மாநில கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கான்பூர் ஐஐடியில் கம்ப்யூட்டர் அறிவியல் பட்டம் பெற்றவராவார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பொது கொள்கை படிப்பில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். கடந்த 33 ஆண்டுகளாக பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி உள்ளார். குறிப்பாக மின் துறை, நிதித்துறை, வரித்துறை, தகவல் தொழில்நுட்பம், சுரங்கங்கள் உள்ளிட்ட துறைளில் மல்ஹோத்ரா பணியாற்றி உள்ளார். நிதி அமைச்சகத்தின் கீழ் நிதி சேவைகள் துறையின் செயலாளராக முன்பு பதவி வகித்திருக்கிறார்.
மத்திய அரசு, மாநில அரசுகளில் நிதி மற்றும் வரி தொடர்பான துறைகளில் விரிவான அனுபவம் கொண்டவராவார். அவரது தற்போதைய பணியின்படி, நேரடி, மறைமுக வரிகளுக்கான வரி கொள்கை வடிவமைப்பதில் கருவியாக செயலாற்றி வந்தார். முன்னாள் பிரதமரும் ரிசர்வ் வங்கி ஆளுநருமான டாக்டர் மன்மோகன் சிங், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்களான ரகுராம் ராஜன், பிமல் ஜலான், உர்ஜித் படேல், டி சுப்பாராவ், டாக்டர் ஒய்வி ரெட்டி, டாக்டர் சி ரங்கராஜன் மற்றும் எஸ் ஜகநாதன் ஆகியோர் அடங்கிய புகழ்பெற்ற ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் பட்டியலில் மல்ஹோத்ராவும் இடம் பெறுகிறார்.