ஹைதராபாத்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ்(87), உடல் நலக்குறைவால் கடந்த 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ராமோஜி ராவின் உடல் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் ராமோஜி ராவின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
ராமோஜி ராவின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், உறவினர்கள் எனப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய ஊடகத்தின் புரட்சியாளர், தொலைநோக்கு பார்வையாளரை இழந்துவிட்டோம் என மூத்த பத்திரிகையாளரும் ராமோஜி குழுமத் தலைவருமான ராமோஜி ராவ் மறைவுக்குப் பிரதமர்(பொறுப்பு) நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தேரிவித்துள்ளனர். தெரிவித்துள்ளனர்.
ராமோஜி குழுமத்தின் நிறுவனரான ராமோஜி ராவ், உலகளவில் திரைப்படத் துறையின் ஜாம்பவனாகவும், ஊடகத் துறையின் அதிபராகவும் திகழ்ந்தார். மேலும், ராமோஜி ராவ், ஈடிவி நெட்வொர்க் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராகவும் வலம் வந்தவர். தற்போது இவரது மறைவு அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.