ஹைதராபாத்: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளிலும் முதல் கட்டமாக, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதையடுத்து, ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா உட்பட 13 மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், இன்று (மே 7) குஜராத், அசாம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவானது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில், அடுத்தகட்டமாக தெலங்கானாவில் உள்ள 12 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் வருகின்ற மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், "ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது குடிமகனின் உரிமை மட்டுமல்ல, பொறுப்பும் ஆகும்" என்று தெலங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரி விகாஸ்ராஜ் வாக்காளர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில், ஒவ்வொரு வாக்காளரும் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குரிமையைச் செலுத்தவும், வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இலவசப் பயணங்களை வழங்குவதற்கான 'ரைடு ரெஸ்பான்சிபிலிட்டி' (Ride Responsibility) என்ற திட்டத்தை ரேபிடோ நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள LB ஸ்டேடியத்தில் வைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விகாஸ்ராஜ் பேசுகையில், "தெலங்கானாவின் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்களுக்கு இலவச சேவையை வழங்க ரேபிடோ முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது. இதுவரையில், ஹைதராபாத்தில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு ஆனதில்லை. ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு 60 முதல் 65 சதவீதத்தை தாண்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த திட்டம் குறித்து ரேபிடோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ரோஹித் கூறுகையில், "தேர்தல் நாளில், 'ஓட் நவ்' (vote now) என்ற குறியீட்டைப் பயன்படுத்தி ரேபிடோ செயலி மூலம் வாக்காளர்கள் இலவச பயணங்களைப் பெறலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக ஹைதராபாத்தில் சிறப்பு சேவைகள் இருக்கும். ஹைதராபாத், கரீம்நகர், கம்மம், வாரங்கல் உள்ளிட்ட ரேபிடோ சேவை உள்ள நகரங்களில் இந்த சேவை வழங்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் விறுவிறு வாக்குப்பதிவு.. கவனத்தை ஈர்த்த பாரமதி தொகுதி நிலவரம் என்ன?