மும்பை: இந்தியாவில் பண்டிகை என்பது கடல் போல் பரவிக் கிடக்கும் ஒன்றாகும். நம் மக்களால் குடும்பம், கிராமம், பொது என ஒவ்வொரு அங்கத்திலும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தீபாவளி என்பது இந்தியாவின் தலை முதல் பாதம் வரை உள்ள அனைவராலும் அன்போடு கொண்டாடப்படுகின்ற பண்டிகையில் ஒன்றாகும். இதன் கொண்டாட்ட முறைகள் மாறினாலும், தீபாவளி என்ற திருநாள் மாறப் போவதில்லை.
இப்படிப்பட்ட இந்த தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு நாடு முழுவதும் புலம் பெயர்ந்த பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்படுவர். இவர்களில் திட்டமிட்டு பண்டிகைக்குச் செல்லுதல், எதிர்பாராத விதமாக திடீரென பண்டிகைக்கு புறப்படுதல் என இருப்பர். இதனால் பயணத்தில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, பலரும் ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுப்பர். காரணம், குறைவான பயணக் கட்டணம், கழிப்பறை வசதி என்பதை முன்னிறுத்துவர்.
இவ்வாறு பண்டிகை காலங்களில் ரயிலில் செல்பவர்கள் கடைசி நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாமல், பொதுப் பெட்டிகளில் மிகுந்த கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், பண்டிகை கால சிறப்பு ரயில்கள் என பயணிகளின் எண்ணிக்கை, தேவைக்கேற்ப இயக்கப்படும். ஆனால், இந்த ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக ரயில்வே அறிக்கைகள் தெரிவிப்பதால், புதுவித யுக்தியை ரயில்வே மேற்கொண்டு உள்ளது.
இதையும் படிங்க: "தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்; தினமும் கூடுதலாக 2 லட்சம் பேர் பயணிக்கலாம்"
இது குறித்து வடக்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஹிமான்சு சேகர் உபாதயாய் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “கடந்த ஒரு வருடத்தில் மட்டும் குறிப்பிட்ட மக்கள் எந்த இடத்தில் இருந்து எங்கு அதிகமாக பயணம் மேற்கொள்கின்றனர், அவர்களது பயண அட்டவணை எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம்.
பின்னர், இதன் மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து, சுமார் 50 லட்சம் பயணிகளுக்கு, அவர்களுக்குத் தேவையான வழித்தடத்தில் பண்டிகை காலத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த தகவல்களை குறுஞ்செய்திகளாக (SMS) அனுப்பினோம். இந்த முயற்சி எங்களுக்கு பலன் அளித்து உள்ளது. இதன் மூலம் பண்டிகை கால சிறப்பு ரயில்களில் முன்பதிவு அதிகரித்து உள்ளது” எனத் தெரிவித்தார்.
Diwali Travel Made Easier!✨
— Southern Railway (@GMSRailway) October 30, 2024
Southern Railway is bringing in the festive cheer with 258 special trains across 48 routes!
Book your tickets now and enjoy a hassle-free journey.#FestivalSpecialTrains #Diwali #Diwali2024 #SouthernRailway #IndianRailway pic.twitter.com/vSI9e16Zek
முன்னதாக, அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 முதல் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும், இதன் மூலம் தினமும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் பண்டிகை காலங்களில் நாடு முழுவதும் பயணம் செய்வதாகவும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அதேநேரம், சென்னை சென்ட்ரல் - செங்கோட்டை, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் தாம்பரம் - கோவை உள்பட 258 சிறப்பு ரயில்கள், 48 வழித்தடங்களில் தெற்கு ரயில்வே தரப்பில் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.