புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த கவலை அறிந்து அப்பகுதி சேர்ந்த இளைஞர்களும் ஊர் பொதுமக்களும் காவல் நிலையத்திற்கு உள்ளே நுழைய முயன்றனர்.
ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் காவல்நிலையத்தில் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி வெளியேற்றினர். இதனால், முத்தியால்பேட்டை பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
சிறுமி மாயம்: புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியை சேர்ந்த தம்பதியின் 9 வயது மகள் கடந்த மார்ச் 2ஆம் தேதி மாலை 6 மணியளவில், தனது தோழிகளுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சிறுமியை அவரது தாயார் தேடிவந்தபோது, அவர் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் பதறிப்போய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் சிறுமி சிறுமியை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து, சோலை நகர் புறக்காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், சோலை நகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஐந்து தனிப்படைகள் அமைத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சிறுமியை தீவிரமாக தேடிவந்தனர்.
சடலமாக மீட்பு: இதனிடையே சிறுமி காணாமல் போய் 3 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்காத காவல்துறையைக் கண்டித்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு, நேற்று (மார்ச் 5) சிறுமியின் வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில், சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதறி அழுத சம்பவம், காண்போரைக் கண்கலங்க வைத்தது. மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமியை கொலை செய்து, கால்வாயில் வீசப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் கொலையாளிகள் மீது நடவடிக்கை கோரியும், மெத்தனமாக நடந்து கொண்ட போலீசாரை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சோலை நகர் பகுதி பொதுமக்கள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முத்தியால்பேட்டை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்; பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை