புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப்.19) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் சுமூகமாக தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோடை காலம் என்பதால் புதுச்சேரியில் காலை 6.30 மணிக்கே வாக்காளர்கள் வர துவங்கிவிட்டனர். தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது வீட்டு அருகில் உள்ள திலாஸ் பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் யமஹா பைக்கில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். பொதுவாக புதுச்சேரிக்குள் புல்லட்டில் சென்று வருவதை வழக்கமாக வைத்து இருப்பார்.
ஆனால் அண்மைக்காலமாக புல்லட்டில் சென்று வருவதில்லை. காரில் தான் சென்று வருகிறார். இந்த நிலையில், வாக்களிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் அவர் வந்தது அவரது தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அதே போல் புதுச்சேரி நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஆ.நமச்சிவாயம் வில்லியனூர் அரசு தொடக்கப்பள்ளியில் வாக்கு செலுத்தினார். இதற்கிடையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். இதே போல் பலரும் தங்களது ஜனநாயக கடமையை காலை முதலே நிறைவேற்றி வருகின்றனர்.
பழுதான வாக்குப்பதிவு இயந்திரம்: இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுல்தான்பேட்டை மவுனியா மண்டபத்தில் வாக்குப்பதிவு மையம் வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரம் காலை 7 மணிக்கு வேலை செய்யாத காரணமாக வேறொரு மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 8.30 மணிக்கு மீண்டும் மின்னணு இயந்திரம் பழுதாகியது. இதனையடுத்து அதனை அதிகாரிகள் செய்து சரி செய்த நிலையில் தற்போது மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணிநிலவரப்படி புதுச்சேரியில் 12.75%வாக்கு பதிவானது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கையில் பூத் சில்ப் இல்லை என்று கவலை வேண்டாம்.. ஆன்லைனில் அறிய இதோ வழிமுறைகள்!