டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ஐந்து கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் வரும் 25-ஆம் தேதி ஆறாம் கட்டத் தேர்தலும், ஜூன் 1-ஆம் தேதி இறுதிக் கட்டத் தேர்தலும் நடக்கவுள்ளது. மீதமுள்ள 115 தொகுதிகளில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜேடி(பிஜு ஜனதா தளம்), பாஜக தலைவர்கள் இடையே பிரசார களத்தில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் வி.கே.பாண்டியனை மையப்படுத்தி தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசா மாநிலத்தை அதிகாரம் செய்வதா என பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கருத்து தெரிவிக்கும் வரை சென்றுள்ளது.
பரபரப்பான அரசியல் பிரசாரத்திற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, அரசியல் ரீதியான பல்வேறு கேள்விகள், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். எனது தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், எனது தாயார் மறைவுக்குப் பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக இறைவன் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம், பூரி தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா, "கடவுள் பூரி ஜெகன்நாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர் தான்" எனக் கூறிய நிலையில், அவரது கருத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். ஒடிசா மக்கள் பலரும் சம்பித் பத்ராவின் பேச்சை ட்ரோல் செய்த நிலையில், தான் வாய் தவறி அவ்வாறு கூறிவிட்டதாக சம்பித் பத்ரா விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் பிரதமரானால் என்ன தப்பு?" - கேள்வி எழுப்பும் கி.வீரமணி