டெல்லி: இந்தியா முழுவதும் தேசியப் படைப்பாளர்கள் விருது (National Creators Awards) வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (மார்ச்.08) நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது சிறந்த கதை சொல்வதற்கான தேசியப் படைப்பாளர் விருதினை வென்ற கீர்த்திகா கோவிந்தசாமி விருதினை பெரும் போது பிரதமர் காலில் விழுவதற்கு முயன்றார். ஆனால், அதனை தடுத்த பிரதமர் நரேந்திர மோடி மூன்று முறை கீர்த்திகா கோவிந்தசாமியை குனிந்து வணங்கினார். பின் கீர்த்திகா கோவிந்தசாமியுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
அப்போது அந்த பெண்ணிடம் பேசிய பிரதமர், "அரசியலில் காலில் விழுவது கலாச்சாரமாக மாறிப்போய்விட்டது. கலைத்துறையில் காலில் விழுவது என்பது வேறு. ஆனால், அரசியலில் இருக்கும் எனக்கு, காலில் விழும் போது மிகவும் தொந்தரவாக உணர்கிறேன்" என கூறினார்.
தேசியப் படைப்பாளி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது X வலைத்தளத்தில், "தேசியப் படைப்பாளிகள் விருதுகள் வழங்கப்படுவதையொட்டி, முழுச் செயல்முறையிலும் பங்கேற்று வாழ்த்த விரும்புகிறேன். இந்த விருதுகள் திறமைகளை ஊக்குவிக்கும் புதிய திறமைகளை வெளி கொண்டு வரவும் உதவுகிறது. தொடர்ந்து கடினமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் உழைத்து, நம் அனைவரையும் பெருமைப்படுத்தும்படி புதிய படைப்பாளர்கள் உருவாக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் விசிக-2, மதிமுக-1 முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!