ராஞ்சி: ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை நிரூப்பிக்க உள்ள நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநரிடம் முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை இன்று (பிப்.5) ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அம்மாநிலத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் நிலக்கரி சுரங்க முறைகேடு, பண மோசடி குற்றச்சாட்டு உள்ளிட்டவைகள் தொடர்பாக விசாரணைக்காக ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவைகளுக்கு செவி சாய்க்காத நிலையில், டெல்லியில் உள்ள ஜார்க்கண்ட் மாநில இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, ஹேமந்த் சோரனின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவி ஏற்க, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரியிருந்த நிலையில் ஆளுநரால் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்டார்.
இதற்கிடையே, சட்டம் ஒழுங்கு காரணமாக இன்று (பிப்.5) ராஞ்சி மாவட்ட நிர்வாகம் சட்டமன்ற கட்டிடத்தின் 100 மீட்டர் தூரம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 8:00 மணி முதல் நாளை இரவு 10:00 மணி வரை இந்த தடை நீடிக்கும். மேலும், அப்பகுதியில் எவ்விதமான ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவற்றிற்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், இவ்வாக்கெடுப்பின் முடிவில் இந்தியா கூட்டணிக்கு வெற்றிக்கான வாய்ப்புள்ளதால், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
முன்னதாக, இந்தியா கூட்டணியில் (காங்கிரஸ்) உடன் கூட்டணியில் இருந்த பீகாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கைக்கோர்த்து கூட்டணியில் இருந்து பின்வாங்கியது அக்கூட்டணிக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்கனவே அளித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது X பக்கத்தில், 'ஜன.28ஆம் தேதி, பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். மீண்டும் அதே நாளில், நிதீஷ்குமார் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார்.
மேலும், சட்டமன்றத்தில் தனது கூட்டணியின் பெரும்பான்மையை நிரூபிக்க பிப்ரவரி 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஜன.31ஆம் தேதி, ஜார்கண்ட் முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். பிப்.2 ஆம் தேதி, சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றார்.
அதேபோல, ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் தனது கூட்டணியின் பெரும்பான்மையை நிரூபிக்க பிப்.5 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பீகாரை விட ஜார்கண்டில் 'குதிரை வர்த்தகம்' வேகமாக நடக்கும் என்று ஜி-2, பிரதமரும், எச்.எம்.யும் நினைக்கிறார்கள். அவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஜார்க்கண்டில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய குழு எளிதாக வெற்றி பெறும், மேலும் பீகாரில் ஆர்ஜேடி மற்றும் ஐஎன்சியை உடைக்கும் பாஜகவின் முயற்சிகளும் படுதோல்வி அடையும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் 37 எம் எல் ஏக்கள் ஹைதராபாத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு விரைந்துள்ளனர்.
இதற்கிடையே, தனது கூட்டணியில் உள்ள எம் எம் ஏக்களை பாஜக குதிரை பேரமாக பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சியைத் தடுக்கும் மிக முக்கியமான வேளையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இவருக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ளன . மொத்தம் 81 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சருக்கு 46 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நிரூபிக்க ஜேஎம் எம் கூட்டணிக்கு 41 எம் எல் ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பாய் சோரனுக்கு ஜேஎம் எம் (28), காங்கிரஸ் (16), ஆர்ஜேடி (1), சிபிஎஐ (எம் எல்) (1) எனவும், பாஜக கூட்டணிக்கு 29 எம் எல் ஏக்களின் ஆதரவு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கணக்கெடுப்பில் வாக்களிக்க சிறப்பு அனுமதியளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றார்!