ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள மாணவர் விடுதியில், படிப்பு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், கல்லூரி முதலாமாண்டு மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் காந்தாரி மண்டலத்தில் உள்ள திப்பரி தாண்டா பகுதியைச் சேர்ந்த வெங்கட் (வயது 19) போதன் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, கல்லூரி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். விடுதி படிப்பதற்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்கியிருக்கும் பட்சத்தில், வெங்கட் அதற்கான பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். ஆகவே மற்ற மாணவர்களிடம் அரட்டை அடிப்பதை நிறுத்தி விட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெங்கட் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் இருந்த சிலர், மாணவனை கொலை செய்தவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், வெங்கட்-ஐ தாக்கிய 6 மாணவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள், படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதால், வெங்கட்-ஐ ஒரு அறையில் வைத்து உடல் ரீதியாக தாக்கி கொலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டி, நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உபி பட்டாசு ஆலை வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!