ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா (வயது 28). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணத்திற்கு முன்னதாக பல் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணிய அவர், ஹைதராபாத் நகரில் உள்ள சர்வதேச பல் மருத்துவமனையை நாடி உள்ளார். அங்கு பல் சிகிச்சை ஒன்றை மேற்கொண்ட போது, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து லட்சுமி நாராயணாவின் தந்தை, தனது மகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு லட்சுமி நாராயணாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் லட்சுமி நாராயணாவின் மரணம் குறித்து அவரது தந்தை, மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்துவிட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் பல் சிகிச்சையின் போது அனஸ்தீசியா (anaesthesia) என்னும் மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்ததால் லட்சுமி நாராயணா, சுய நினைவை இழந்து, உயிரிழந்து விட்டார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து லட்சுமி நாராயணாவின் தந்தை, ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில், தனது மகன் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர்கள் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, பின் மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர். மருத்துவமனை பதிவு மற்றும் ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பல் சிகிச்சைக்காக சென்ற இளைஞர், மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அமராவதியில் அரங்கேறிய கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே 4பேர் உயிரிழந்த பரிதாபம்..!