பெங்களூர்: இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர் இந்திய ஹாக்கி அணி வீரரான வருண் குமார். இவர் அர்ஜுனா விருது பெற்றவர். இந்திய ஹாக்கி அணிக்குள் 2017ஆம் ஆண்டு நுழைந்த வருண், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் (Tokyo Olympics) வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.
இதையடுத்து, இந்திய அணி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்கு, ஹாக்கி வீரரான வருண் குமாரின் பங்களிப்பைப் பாராட்டி இமாச்சல பிரதேச அரசு அவருக்கும் ரூ.1 கோடி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் (Birmingham Commonwealth Games) வெள்ளியும், அதே ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் (Asian Games) தங்கமும் வென்ற இந்திய அணியிலும் வருண் இடம் பிடித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணி வீரரான வருண் குமார் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பதாகக் கூறி தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளம்பெண் ஒருவர் பெங்களூரு ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
அப்புகாரில், அந்த பெண்ணிற்கு 17 வயது இருக்கும்போது 2019-ல் வருண் குமாருக்கும், அவருக்கும் சமூக வலைதளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து தன்னை காதலிப்பதாகக் கூறி பலமுறை வருண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு முன்பு தனது தந்தையின் மறைவின் போது கடைசி முறையாக வந்து ஆறுதல் சொல்லிவிட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் இந்திய ஹாக்கி அணி வீரர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூகுள் மேப் மூலம் செல்போன் திருடனை பிடித்த இளைஞர்! இணையத்தில் பகிர்ந்த ருசிகர தகவல்!