டெல்லி: கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (பிப். 10) நிறைவடைந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத் தொடர் என்பதால் 17வது மக்களவை கூட்டத் தொடரின் இறுதி நாளில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், 17வது மக்களவையான கடந்த 5 ஆண்டுகளில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றத்தை கண்டு உள்ளதாகவும் 17வது மக்களவையை நாடு ஆசீர்வதிக்கும் என தான் நம்புவதாகவும் கூறினார். மேலும், சீர்திருத்தமும், செயல்பாடும் ஒரே நேரத்தில் நடந்து மாற்றம் நம் கண்முண்ணே நடப்பது மிகவும் அபூர்வமானது என்றும் இந்த அபூர்வத்தை 17வது மக்களவை மூலம் நாடு அனுபவித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
வலிமையான இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கும் முக்கியமான சீர்திருத்தங்கள் கடந்த 5 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டம் ரத்து போன்ற மிகவும் நீண்ட காலமாக காத்திருந்த முடிவுகள் இந்த மக்களவை தொடரில் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும் முத்தலாக் தடை, பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய முடிவுகள் இந்த மக்களவை தொடரில் எடுக்கப்பட்டதாகவும் மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து எவ்வளவு விரைவாக அரசு வெளியேறுகிறதோ, அவ்வளவு விரைவாக ஜனநாயகம் வலுப்பெறும் என தான் நம்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொண்டால், முடிவுகள் நிச்சயமாக வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும் என்றும் அடுத்த 25 ஆண்டுகள் நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். நாட்டின் விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு, கனவுகள் மற்றும் தீர்மானம் என அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் எதிர்கால இலக்குகளை அடைய வேண்டும் என்று கூறினார்.
நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அனைவரும் பேசி வந்த நிலையில், அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் மக்களவை சபாநாயகர் தலைமையிலான குழு தான் அதை முன்னோக்கி எடுத்து சென்று அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் விளைவாகவே இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாடு பெற்றதாக பிரதமர் மோடி கூறினார்.
ஜி20 தலைமை பொறுப்பை பெற்றது இந்தியாவுக்கு ஒரு பெரிய கவுரவம் கிடைத்தது போன்றது என்றும் நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் இந்தியாவின் திறனையும், தங்கள் சொந்த அடையாளத்தையும் உலகிற்கு முன் வெளிப்படுத்தியதால் அதன் தாக்கம் இன்றளவும் உலகத்தின் மனதில் தொடர்வதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கு சரியான நேரம் வந்துவிட்டதாகவும், பாஜகவின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா புதிய வேகத்தில் முன்னேறும் என்றும் மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடியின் உரையை தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க : "நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சிஏஏ அமல்"- மத்திய அமைச்சர் அமித் ஷா!