கன்னியாகுமரி: மக்களவை தேர்தலை முன்னிட்டு தென் தமிழகத்திற்கு மூன்று நாட்கள் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்ட பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தொடர்ந்து 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
கடந்த மே 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு விவேகானந்தர் பாறையில் தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி தொடர்ந்து முதல் நாள் தியானத்தை நிறவு செய்த பின் அங்கு அவருக்காக தயார் செய்யப்பட்டிருந்த தனி அறையில் ஓய்வு எடுத்தார். பின்னர் இரண்டாவது நாள் தியானத்தை சூரிய வழிபாட்டுடன் தொடங்கினார்.
தொடர்ந்து இன்று (ஜூன்.1) காலை மீண்டும் சூரிய வழிபாடு நடத்தி விட்டு, விவேகானந்தர் மண்டபத்தை வளம் வந்த பிரதமர் மோடி மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் தனது 45 மணி நேர தியானத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். விவேகானந்தர் பாறையில் இருந்து புறப்பட்டு வெளியே வந்த பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டப ஊழியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மோடி, தனக்காக ஒதுக்கப்பட்ட விவேகானந்தா என்ற படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்தார். அங்கு திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். கடலுக்கு நடுவே பிரமாண்டமாக எழுந்து நிற்கும் திருவள்ளுவரை வியப்புடன் பார்த்த பிரதமர் மோடி அங்கு எழுதப்பட்டு இருந்த திருக்குறளின் அர்த்தம் குறித்து அருகில் இருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து, படகில் கரைக்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்த கான்வாயில் ஏறி ஹெலிபேட் தளம் நோக்கி புறப்பட்டார். தொடர்ந்து திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இன்று மாலை 6 மணியுடன் நாடு முழுவதும் 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் வேட்பாளர் யார்? தொடங்கியது இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்! - India Alliance Meeting