டெல்லி: நேற்றைய முன்தினம் இரவு மேற்கு டெல்லியின் பழைய ராஜேந்திர நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் திடீரென மழைநீர் புகுந்ததில் இரண்டு மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, அன்று முதல் இன்று வரை அப்பகுதியில் யுபிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், இது தொடர்பாக தேர்வு மையத்தின் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல், அந்த மையத்தின் மூன்று தரைத்தளங்கள் மற்றும் 7 கட்டடங்களுக்கு விதிமீறல் தொடர்பாக டெல்லி மாநகராட்சி சீல் வைத்துள்ளது. இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஜூன் 26 அன்று பெற்ற புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறிய டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேந்திர நகரில் நிகழ்ந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மற்றும் டெல்லியில் உள்ள ஒவ்வொரு மாவட்ட வாரியாக உயர்மட்டக் குழு அமைத்து சட்டவிரோதமாக விதிமீறலுடன் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக பேசிய டெல்லி மத்திய காவல் துணை ஆணையர் எம் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “ராஜேந்திர நகர் விவகாரம் தொடர்பாக மேலும் 5 பேரை கைது செய்துள்ளோம். இதில் தரைத்தளத்தின் உரிமையாளரும் அடங்குவார். மேலும், தனியாக 4 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார். மேலும், மழைநீரில் கார் ஒன்று தத்தளித்ததால் தண்ணீர் வரத்து அதிகரித்து அடித்தளத்தின் கதவு இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம் எனவும் அவர்கள் கூறினர்.
Former Chairperson DCW & RS MP @SwatiJaiHind filed a suspension of business notice in the Parliament today to discuss the tragic death of three #UPSCaspirants in #RajendraNagar !! pic.twitter.com/jH8QLyDDJ9
— Vandana Singh (@VandanaSsingh) July 29, 2024
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்பி ஸ்வாதி மாலிவால் மாநிலங்களவையில் நோட்டீஸ் ஒன்றை இது தொடர்பாக அளித்துள்ளார். அதில், ராஜேந்திர நகர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கான நீதி மற்றும் இழப்பீட்டை முதன்மையாக கருதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “படேல் நகர் மற்றும் ராஜேந்தர் நகர் ஆகிய இடங்களில் உயிரிழந்த 4 யுபிஎஸ்சி மாணவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீடு - நாட்டின் முன் முக்கிய பிரச்னையை விவாதிப்பதற்காக 267 விதியின் கீழ் மாநிலங்களவையின் அலுவல்களை நிறுத்தி வைப்பதற்காக நான் இன்று நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளேன். மாணவர்களின் குரல் ஒலிக்காமல் போகாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளநீர்.. யுபிஎஸ்சி மையம் அறிக்கை.. தரைத்தளத்திற்கு சீல்!