மும்பை: மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை மேற்கொள்வதற்கு ஏற்றபடி வங்கிகள் தங்களது பணப்பரிமாற்ற முறை எளிமையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,"பணபரிமாற்ற முறைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், வங்கிகள், அங்கீகாரம் பெற்ற வங்கி சாரா பணப்பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை எளிமையான முறையில் பணபரிமாற்றம் மேற்கொள்வதை உறுதி செய்ய தங்களுடைய பணப்பரிமாற்ற முறைகளில், பணப்பரிமாற்றம் மேற்கொள்வதற்கான கருவிகளில் மாற்றுத்திறனாளிகளும் பணபரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் ஆய்வு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: யுபிஐ மூலம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை.. ரெப்போவில் மாற்றம் ஏதும் இல்லை ஆர்பிஐ வெளியிட்ட அப்டேட்!
ஆய்வின் அடிப்படையில் வங்கிகள்,வங்கிசாரா பணப்பரிமாற்ற சேவை வழங்குநர்கள் பணப்பரிமாற்ற முறைகள், பாயிண்ட் ஆப் சேல் எனப்படும் ஸ்வைப் கருவிகளில் மாற்றுத்திறனாளிகளும் பரிமாற்றம் செய்யும் வகையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்,அதே நேரத்தில் இந்த மாற்றங்கள் பணப்பரிமாற்ற கருவிகளின் பாதுகாப்பு அம்சத்தில் சமரசம் செய்வதாக இருக்கக்கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தால் இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்ட நிலையான அணுகுமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை கவனத்தில் கொள்ளும்படியும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. பணப்பரிமாற்ற முறைகள், கருவிகளில் என்னவிதமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன, எவ்வளவு காலத்துக்குள் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஒரு மாதத்துக்குள் பணப்பரிமாற்ற முறையின் பங்கெடுப்பாளர்கள் ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.