டெல்லி: மூன்று வார இடைவெளியில் மீண்டும் நாடாளுமன்றம் இன்று (ஜூலை.22) கூடுகிறது. அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பிரதமர் மோடி தலைமையின் கீழ் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 25ஆம் தேதி மக்களவை கூடிய நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், மூன்று வார இடைவெளியில் மீண்டும் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் நடப்பாண்டின் பட்ஜெட்டை நாளை (ஜூலை.23) தாக்கல் செய்கிறார். தேர்தலுக்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்து இருந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், 7வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கன்வர் யாத்திரை பெயர் பலகைகளில் உரிமையாளர் பெயர் வைப்பதற்கு அனுமதி, நீட் தேர்வு, அக்னிவீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நடப்பு கூட்டத் தொடரில் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசை முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
அதேநேரம், கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் மக்களவையில் பெரும் விவாதங்களுக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மொத்தம் 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் துணை முதல்வர் விவகாரம்.. ஒரே நேரத்தில் உயர் பதவி வகித்த தந்தை - மகன் யார்? - Father and son heir politics