புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமத்தைச் சேர்ந்தவர் மதி. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாய்க்குட்டி ஒன்றை வாங்கி, அதற்கு ரேம்போ என பெயர் வைத்து செல்லமாக வளர்த்த வந்துள்ளார். ரேம்போவை தனது குடும்பத்தில் ஒருவராகப் பார்த்து வந்த மதி, ரேம்போக்கு என்னென்ன உணவுகள் வேண்டுமோ, அவையெல்லாம் தேடித் தேடி வாங்கி வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட ரேம்போ, நேற்று திடீரென உயிரிழந்துள்ளது.
ரேம்போவின் மறைவை மதியின் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் கடுமையான சோகத்தில், மன வருத்தத்திற்கு ஆளாகினர். மேலும், தனது செல்லப்பிராணி ரேம்போ இறந்ததை ஊர் முழுவதும் தெரியப்படுத்த வேண்டும் என்று, கண்ணீர் அஞ்சலி போஸ்டரை புதுச்சேரி முழுவதும் ஒட்டி உள்ளார். அது மட்டுமல்லாமல், தனது குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் செய்யப்படும் சடங்குகள் போன்று வீட்டில் முன்பு பந்தல் அமைத்து, சவப்பெட்டியில் ரேம்போவின் உடலை வைத்து, உறவினர்களுக்கு சொல்லி அனுப்பி உள்ளார்.
உறவினர்களும் மாலையுடன் வந்து, ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலியும் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, ரேம்போவுக்கு அனைத்து சடங்குகளையும் செய்து, தனது வீட்டுக்குள்ளேயே அடக்கம் செய்தார். இறந்த தனது செல்லப்பிராணியை தனது வீட்டிலேயே சடங்கு செய்து அடக்கம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா: மல்லிகைப்பூ அலங்காரத்தில் மாதா தேர்பவனி! - Poondi Madha Basilica Festival