போபால்: மத்தியப் பிரதேசத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத நிலை உள்ளது.
அரசின் 'சிஎம் ரைஸ் பள்ளி'-களில் சேர்க்கைக்காக நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் இச்சூழல் உள்ளது. 'ராஜ்ய சிக்ஷா கேந்திரா' வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் 2024-25ம் கல்வியாண்டில் 5,500 பள்ளிகள், ஒன்றாம் வகுப்பில் ஒரு சேர்க்கையை கூட பதிவு செய்யவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் சுமார் 25 ஆயிரம் பள்ளிகளில் ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். 11,345 பள்ளிகளில் தலா வெறும் 10 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுமார் 23 ஆயிரம் பள்ளிகளில் 3 முதல் 5 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புகின்றனர். பல அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர், கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், நிரந்தர ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் கவுரவ ஆசிரியர்களைக் கொண்டு இயங்குவதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதிய உணவு, இலவச சீருடை, பாடபுத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது மிகக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், 'ராஜ்ய சிக்ஷா கேந்திரா' இயக்குநர் ஹர்ஜிந்தர் சிங் கூறுகையில், "இது தொடர்பாக இன்னும் தரவுகளை ஆய்வு செய்யவில்லை.
அதேநேரத்தில் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்படும். சில பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படவில்லை என்பதால் அவற்றில் கல்வியில் குறைபாடு இருக்கிறது என்பதல்ல. ஆனால், தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை" என்றார்.