டேராடூன்: மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதே போன்றதொரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அரங்கேறி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த பதின் பருவ சிறுமி தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறுமி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சிறுமி, டெல்லி வழியாக மொரதாபாத் பகுதிக்கு வந்து உள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு விரைந்துள்ளார். மொரதாபாத்தில் இருந்து மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து மூலம் டேராடூனுக்கு அதிகாலை 2.30 மணிக்கு சிறுமி வந்து உள்ளார். இந்நிலையில், சிறுமி பேருந்தில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட சிலர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அதிகாலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் இறுதியில் பேருந்தில் இருந்து கீழ் இறக்கிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. கொட்வளி படேல் நகர் போலீஸ் சோதனைச் சாவடி அருகே அலங்கோலமாய் நின்று கொண்டு இருந்த சிறுமியை கண்ட அருகில் இருந்தவர்கள் சிறுவர்கள் நல காப்பகத்திற்கு தகவல் அளித்து உள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறுவர் நல காப்பகக் குழுவினர் சிறுமியை மீட்டு உரிய சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அங்கு சிறுமிக்கு மனநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து காப்பக அதிகாரிகளிடம் சிறுமி கூறி உள்ளார். இந்நிலையில், காப்பக அதிகாரிகள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்தில் சம்பவம் நடந்து இருப்பதால் குறிப்பிட்ட பேருந்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே பேருந்து சிவப்பு நிறத்தில் இருந்ததாக சிறுமி அளித்த தகவலை தொடர்ந்து சம்பவம் நடந்தது உத்தர பிரதேச மாநில பேருந்தில் என்பதை கண்டறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்திற்கு போலீசர் விரைந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை நிச்சயம் கைது செய்வோம் என்று தெரிவித்து உள்ளனர். சிறுமி அளித்த புகார் தொடர்பாக அடையாளம் தெரியாத ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர்: 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ரிப்போர்ட் கேட்கும் உள்துறை! என்ன காரணம்? - Kolkata Doctor Murder case