புதுடெல்லி: புதிதாக வேலைக்கு வருவோருக்கு ஒரு மாத சம்பளத்தை அரசு ஊக்கத்தொகையாக வழங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட் இளைஞர்களை கவரும் வகையில் பல அறிவிப்புகளைக் கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக வேலைவாய்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 3 விதமான திட்டங்கள் உள்ளன. EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் என்ரோல் ஆவதன் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
திட்டம் 1: படிப்பு முடித்து அமைப்பு சார்ந்த துறைகளில் முதன்முறையாக பணிக்குச்சேரும் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் மாத சம்பளம் நேரடியாக வங்கிக் கணக்கில் அரசால் அனுப்பி வைக்கப்படும். இது மூன்று தவணைகளில் வழங்கப்படும். அதிகபட்சமாக மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெறுவோர் வரையிலும் இந்த உதவியைப் பெற தகுதியானவர்கள். அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் 2 கோடியே 10 லட்சம் இளைஞர்கள் பயன்பெற உள்ளனர்.
திட்டம் 2: இந்த திட்டம் உற்பத்திசார் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்படுகிறது. பணியிடங்களில் முதன்முறையாக வேலைக்கு செல்வோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பணியாளர் என இருவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்
திட்டம் 3: இந்த திட்டம் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கானது. அனைத்து துறைகளிலும் கூடுதல் வேலை வாய்ப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும். இவ்வாறு அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரையிலான வேலை வாய்ப்புகளுக்கு இது பொருந்தும். புதிய இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு, அவர்களின் EPFO பதிவு அடிப்படையில் ஒரு ஊழியரின் பதிவுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.