டெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த நிலையில், இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாட்டிற்கு வெளியே உள்ள நகரங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.
பின்னர், இதன் தேர்வு முடிவிகள் வெளியான நிலையில், வினாத்தாள் கசிவு, வினாக்களில் குளறுபடி, தேசிய தேர்வு முகமையால் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் உள்ளிட்டவை பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், மீண்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்ற நிலையில், இறுதியில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட நீட் - யுஜி தேர்வு முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி, இஇயற்பியல் கேள்விக்கான பதிலில் திருத்தம் செய்யப்பட்டதால், 44 பேர் 720க்கு 720 மதிப்பெண்களை இழந்தனர்.
இதற்கு முன்பு 67 பேர் இந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்த நிலையில், கருணை மதிப்பெண் நீக்கப்பட்ட பிறகும், சில விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் மாற்றப்பட்டன. இயற்பியல் வினா விடையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். முழு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மதிப்பெண்களும் குறைந்துள்ளன.
இதையும் படிங்க: நீட் தேர்வு ரத்து செய்ய கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?