டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. கலந்தாய்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல் கூறப்படுகிறது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான (AIQ) கவுன்சிலிங் இன்று (ஜூலை.6) முதல் தொடங்க இருந்தது. ஆனால் வினாத் தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் நீட் கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறியது. வினாத் தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு நீட் மோசடி புகார்கள் குறித்த அனைத்து மனுக்களும் நாளை மறுநாள் அதாவது ஜூலை 8ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வருகிறது.
இந்த மனுக்களில் வினாத்தாள் கசிவு பற்றிய குற்றச்சாட்டுகள், முழுத் தேர்வையும் ரத்து செய்வதற்கான கோரிக்கைகள், மீண்டும் நீட் தேர்வை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் உள்ளன.
இதனால் நடந்து முடிந்த தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுமா அல்லது தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படுமா அல்லது கலந்தாய்விற்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதேனும் விதிக்கப்படுமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் மூழ்கியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், நீட் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது கூடுதல் குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு குளறுபடி இடையே CSIR-UGC NET மற்றும் NEET-PG தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து முன்னாள் இஸ்ரோ தலைவர் ஆர் ராதாகிருஷ்ணன் தேசிய தேர்வு முகமையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உபியில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 38 பேர் படுகாயம்! - UP Bus Accident