டெல்லி: 18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக முடிவடைந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளது.
ஆட்சி அமைப்பது குறித்து இரண்டு கூட்டணிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்த பாஜகவுக்கு போதுமான இடங்கள் இல்லாத நிலையில், கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்கும் சூழ்நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம், மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையே பாஜக பெரிதும் நம்பியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றுது. காலை 11.30 மணி அளவில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் ஆட்சியை கலைப்பது குறித்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து டெல்லி 7 லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் வைத்து பாஜக தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மக்களவை தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையை பெறத் தவறியது, கூட்டணி கட்சிகளின் உதவியுடன் மீண்டும் ஆட்சியை அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திர பிரதேசம் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் டெல்லி விரைந்தனர். இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்க உள்ளதகா தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்சி அமைப்பது யார்? பாஜக, இந்தியா கூட்டணி தீவிர ஆலோசனை! - Lok Sabha Election Result 2024