சென்னை: சமூகத்தில் பாலின சமுத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி தேசிய பெண்கள் தினத்தை அனுசரித்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், பாலின சமத்துவம் என அனைத்து விதத்திலும் பெண்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 2008ஆம் ஆண்டில் இருந்து தேசிய பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் தங்களுக்கான கல்வி உரிமையைப் பெறுவதில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் நிதி நிலையில் அவர்கள் குறிப்பிடும் படியான நிலையை எட்ட முடிவதில்லை. நன்கு கல்வி பெற்று கைநிறைய சம்பாதிக்கும் போதிலும் கூட அவர்களுக்கான சேமிப்பை திட்டமிடுவதிலும், நிதிச் சுதந்திரத்தை பெறுவதிலும் முன்னேற்றம் அடையாமலே உள்ளனர்.
இயல்பாகவே ஆண்களை விட பெண்கள் அதிகம் சேமிப்பு பழக்கம் கொண்டவர்களாக இருந்தும் அவர்கள் நிதிச் சுதந்திரம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்களது சேமிப்பை பெருக்கும் வகையில் திட்டமிடாமல் இருப்பது தான்.
பெண்கள் சமையலறையில் டப்பாக்களிலும், உண்டியல்களிலும் மட்டும் சேமிக்காமல் அவர்களின் சேமிப்பு நாளடையில் பெருகும் வகையில் சேமிக்க வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகளும் பெண்களின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காகவும், நிதிச் சுதந்திரம் அளிக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
பெண்களுக்கா செயல்படுத்தப்படும் திட்டங்கள்: சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana), பாலிகா சம்ரிதி யோஜனா (Balika Samridhi Yojana), மகிளா சம்மான் சேவிங்ஸ் சர்டிபிகேட் (Mahila Samman Savings Certificate), பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao, Beti Padhao), லட்லி மற்றும் கன்யா கோஷ் திட்டம் (Ladli Scheme and the Kanya Kosh Scheme) உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், புதுமைப் பெண், மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதி, பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்டத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY): செல்வமகள் திட்டம் என்று அறியப்படும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் சேமிப்பவர்களுக்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
10வயதிற்குள் உள்ள குழந்தைகளில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம். செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் காலம் 21 ஆண்டுகள் என்றாலும் தவணைச் செலுத்த் வேண்டியது 15 ஆண்டுகளுக்கு மட்டுமே.
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் திட்டம் குழந்தைகள் 18 வயதை எட்டியவுடன் குழந்தைகளின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும். குழந்தைகள் 10வது படிக்கும் போதோ அல்லது 18 வயதிலோ கல்வித் தேவைக்காக இதில் இருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். இந்த திட்டத்தினால் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதுடன் ஆசைப்பட்ட உயர்கல்வியை அடைவதற்கான வழியும் கிடைக்கின்றது.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC): 2023 - 2024ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் கீழ் பெண்கள், பெண் குழந்தைகள் முதலீடு செய்யலாம். 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட இந்த திட்டம் 2025ஆம் ஆண்டு வரை தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை 100இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். 75.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டும் இந்த திட்டத்தில் காலாண்டு அடிப்படையில் வட்டி வரவு வைக்கப்படும்.
பாலிகா சம்ரிதி யோஜனா (BSY): பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் நோக்கில் 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டம் பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பதையும், குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இத்திட்டத்தில் குழந்தை பிறக்கும் போது ரூ.500 வழங்கப்படுகிறது. பின்னர் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பை முடிக்கும் போதோ அல்லது 18 வயதாகும் போது ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்: சமூகத்தில் ஆயிரம் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை குறைவதைத் தடுப்பதையும் (பாலின விகிதாச்சாரம்), பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண் கல்வியை ஊக்குவிக்க கிராமப்புறங்களில் பெண்களுக்கான குடியிருப்பு பள்ளி, பெண்களுக்கான தொழிற்பயிற்சி இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டம்: பெண் கல்வி இடைநிற்றலைத் தடுத்து மேற்படிப்பு படிக்க ஊக்குவிக்கும் திட்டம் புதுமைப்பெண் திட்டம் என்றழைக்கப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம். பள்ளிப்படிப்புடன் மாணவிகளின் படிப்பு நிறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவிகளுக்கு நிதிச் சுதந்திரம் அளிக்கும் வகையில் தமிழக அரசு இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கி வருகின்றது.
தோழி விடுதி: கல்வி பெற்ற பெண்கள் தாங்கள் விரும்பிய துறையில் வேலை பெறுவதற்கும், பள்ளி முடித்த பெண்கள் தாங்கள் விரும்பியத் துறையில் உயர்கல்வி பெறுவதற்கும் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அவ்வாறு சென்னை செல்லும் பெண்கள் பொருளாதார சிக்கல் காரணமாக தாங்கள் முன்னெடுத்த பயணம் தடைபடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவசமாக தோழி விடுதி திட்டத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதி வசதிகளை வழங்குகிறது.
பெண்களுக்கு இலவச பயணம்: கல்வி, வேலைக்கு தினசரி பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் வகையில் தமிழக அரசு 2021ஆம் ஆண்டு முதல் சாதாரண கட்டணமுள்ள நகர பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்காக இலவச பயணம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.