டெல்லி: நடைபெற்று முடிந்த 18வது மக்களவைத் தேர்தல் முடிவின் அடிப்படையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதன்படி, தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதனையடுத்து, மோடியின் புதிய அமைச்சரவையில் பிரதமர் உள்பட 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் மற்றும் இலாகாக்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று (ஜூன் 10) மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்களின் துறைகள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து மொத்தம் 13 பேர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதன்படி, தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இணை அமைச்சராக எல்.முருகன் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர். இவர்கள் மூவரும் ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் உள்ளவர்கள் ஆவர்.
இதையும் படிங்க: மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்களின் முழு லிஸ்ட்!