மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் 'கேட்வே ஆஃப் இந்தியா' தோரணவாயில் மற்றும் லைட் ஹவுஸ் பகுதி இடையே அரபிக்கடலில் முமரம் சைத்ராலி என்ற படகில், உரிய ஆவணங்களின்றி பயணம் செய்ததாக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம் மும்பை போலீசார் இன்று (பிப்.7) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாங்க் ராக் அருகே சசூன் டாக் கடற்பகுதியில், சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த படகை, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த யாலோ கெட் காவல் நிலைய போலீசார் கண்டனர். இதையடுத்து, அப்படகில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில், அப்படகில் இருந்தவர்கள் மீனவர் நிட்சோ டிட்டோ (31), சகாயந்தனிஷ் (29) மற்றும் ஒரு கைக்குழந்தை ஆகிய 3 பேரும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி அப்பகுதியில் உள்ள கொலபா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரபிக்கடல் பகுதிக்குள் இவர்கள் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட போலீசார், சந்தேகத்துக்குரிய படகு மற்றும் அதில் இருந்த 3 பேர்களையும் கொலாபா காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவந்த், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனே, யாலோ கெட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கைகர் உள்ளிட்டோர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இம்மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
கொலபா காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட மேல் விசாரணையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மதன் என்ற ஏஜெண்ட் மூலமாக இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குவைத்திற்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் குவைத் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கு நிட்சோ டிட்டோ, அங்குள்ள அப்துல்லா செரீஃப் என்பவரிடம் மீனவராக வேலை செய்து வந்ததாகவும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளும் உரிமையாளர் அப்துல்லா செரீஃப் ஊதியம் ஏதும் தராமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது இவர்களது பாஸ்போட்டையும் திருப்பித் தராமல், அவ்வப்போது உரிமையாளர் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டி வந்ததாகவும், இதனாலேயே அங்கிருந்து மூன்று பேரும் தப்பித்து ஓடி வந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குவைத் நாட்டில் அங்கு தங்களுக்கு நடத்தும் கொடுமைகளை தமிழ்நாட்டில் உள்ள உறவினர்களிடம் பலமுறை தகவல் தெரிவித்து வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இத்தகைய நிலையில்தான், ஜன.28ஆம் தேதி குவைத் நாட்டிலிருந்து தனது உரிமையாளரின் படகை அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு, கடல் வழியாக 10 நாட்களுக்குப் பின் தற்போது மும்பைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் பயன்படுத்திய படகு, போன்கள், வயர்லஸ் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை கொலாபா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐபி, கடலோர காவல்படை, குடியுரிமை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை, பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-Terrorism Squad - ATS) உள்ளிட்டப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக யாலோ கெட் காவல்நிலைய மூத்த காவல்துறை அதிகாரி சரளா வெசாவே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: TR Balu Vs L.Murugan... நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? அன்ஃபிட் அரசியல் - எதிரொலிக்க என்ன காரணம்?