காசிபூர் : தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தர் அன்சாரி நேற்று (மார்ச்.29) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிறையில் இருந்த அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலம் சொந்த ஊரான காசிபூரில் நடைபெற்றது. காலிபக்கில் உள்ள அவரது பெற்றோரின் இடுகாட்டில் முக்தர் அன்சாரியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் மகன் உமர் அன்சாரி, சகோதரர் அப்சல் அன்சாரி உள்ளிட்ட உறவினர்கள், முக்தர் அன்சாரியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட கட்டுக்கடங்காமல் கூட்டம் திரண்டதால் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பரோல் கிடைக்காத காரணத்தால் முக்தர் அன்சாரியின் மூத்த மகன் அப்பாஸ் அன்சாரி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முக்தர் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே கடந்த மார்ச் 13ஆம் தேதி போலி ஆவணங்கள் வழங்கி துப்பாக்கி லைசன்ஸ் பெற்ற வழக்கில் முக்தர் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சிறையில் இருந்த முக்தர் அன்சாரிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
உடல் நலக் குறைவு காரணமாக பண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முக்தர் அன்சாரி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த முக்தர் அன்சாரியின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை அடுத்து மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழு முக்தர் அன்சாரியின் உடலை பிரதேச பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே தனது சகோதரர் உயிரிழந்தது குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் மூலமாகவே தனது சகோதரர் மறைவு குறித்து அறிந்து கொண்டதாக முக்தர் அன்சாரியின் மூத்த சகோதரர் சிப்கத்துல்லா அன்சாரி தெரிவித்து உள்ளார்.
முன்னதாக முக்தர் அன்சாரியின் மகன் உமர் அன்சாரி, தனது தந்தைக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அமலாக்கத்துறையின் தொடரும் ஆம் ஆத்மி வேட்டை! டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்! - Kailash Gahlot