வயநாடு: கேரளாவின் வயநாட்டில் உள்ள மேப்பாடி, சூரல் மலை மற்றும் முண்டகையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 5வது நாளாக நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக அதிகரித்துள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் தற்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முண்டகையில் நேற்று வரை நடத்தி ரேடார் சோதனையில், உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தேசிய மீட்புப் படை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, ரேடார் சிக்னல் கிடைத்த பகுதியில் நேற்று இரவு சுமார் 5 மணி நேரமாக நடத்தப்பட்ட தேடுதலில் பூமிக்கு அடியில் உயிரோடு இருப்பவர்கள் யாரும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போதுவரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 146 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. 76 சடலங்கள் வரை அடையாளம் தெரியாததால், இன்று பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, இயற்கை சீற்றம் நீடிப்பதால் வயநாட்டில் உள்ள நிவாரண முகாம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது, வயநாட்டில் மட்டும் 90 முகாம்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
VIDEO | Actor Mohanlal (@Mohanlal), dressed in Army uniform, visits an Army camp set up in Meppadi. He is also likely to visit landslides-hit areas of #Wayanad later today.
— Press Trust of India (@PTI_News) August 3, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/A0REYA7Rg6
இந்த நிலையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டோரைக் காண வயநாட்டுக்கு நடிகர் மோகன்லால் ராணுவ உடையில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், மீட்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக பாராட்டு தெரிவித்தார். முன்னதாக, கேரளா முதலமைச்சர், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் மீட்பு பணிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்