நாக்பூர்: மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா உலகளவில் வலிமையாகவும், மரியாதைக்குரிய நாடாகவும் மாறியுள்ளது. ஒரு நாடானது மக்களின் நற்குணத்தால் உயருகிறது. ஆர்எஸ்எஸ் 100 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தாண்டு மிக முக்கியமானது என்றார்.
தொடர்ந்து பேசியவர், ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் எந்தளவுக்கு பரவும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்திருப்பது திருப்தி அளிக்கிறது. மக்கள் மற்றும் அரசு நிர்வாகத்தால், உலக அரங்கில் இந்திய நாட்டின் இமேஜும், அதிகாரமும், புகழும், வளர்ந்து வருவதாக கூறிய மோகன் பகவத் நாட்டை சீர்குலைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் தீய சதிகள் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், வங்கதேசத்தில் கொடுங்கோல் செயல் நிலவுவதாக கூறிய மோகன் பகவத், அங்குள்ள இந்துக்கள் உட்பட சிறுபான்மையினரின் தலையில் அபாய வாள் தொங்குகிறது என்றும் மனிதநேயத்தை ஆதரிக்கும் உலக முழுவதுமுள்ள இந்துக்கள் மற்றும் இந்திய அரசின் உதவிகள் வங்கதேச இந்துக்களுக்கு தேவைப்படுகிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: இளைஞர் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி அகற்றம்...வயிற்றுக்குள் சென்றது எப்படி?
அத்துடன், இந்தியாவுக்கு எதிரான ஒரு கட்டுக்கதையை வங்கதேசத்தில் பரப்பி வருகின்றனர். இந்தியா அச்சுறுத்தல் நாடு என்ற வதந்தியை யாரோ பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒட்டு மொத்த இந்துக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சாதி, மொழி மற்றும் இடத்தின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்கும் முயற்சிகள் தேச நலனை விட பெரியதாகிவிட்டது. ஆரோக்கியமான சமுதாயத்திற்கான முதல் விதியே பல தரப்பு மக்களிடையே இருக்கும் நல்லிணக்கமும், பரஸ்பர நல்லுறவும் தான்.
பரஸ்பர விழாக்களில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.. அவை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பண்டிகைகளாக மாற வேண்டும்.. பல கட்சிகளை கொண்ட இந்த ஜனநாயக நாட்டில், தேசத்தின் பெருமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை இரண்டாம் பட்சமாக மாறி, அற்ப சுயநலமே முக்கியமானதாக மாறிவிட்டது என்றார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை கொலை சம்பவம் வெட்கக்கேடானது என கூறிய மோகன் பகவத், அந்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்