டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அருவருக்கத்தக்கக் காட்சிகள் மற்றும் ஆபாச காட்சிகள் வெளியிட்டதற்காக 18 ஓடிடி தளங்களை முடக்கியுள்ளது. அதேபோல் 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றை முடக்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பலமுறை ஓடிடி தளங்களுக்கு உள்ள பொறுப்புகள் குறித்துக் கூறியிருந்தார். இந்நிலையில் தாகூர் 18 ஓடிடி தளங்களை முடக்கிக் கடந்த மார்ச் 12ஆம் தேதி உத்தரவிட்டார். பெண் மற்றும் குழந்தைகள் உரிமைகள் ஆகிய துறைகள் சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-த்தின் படி இந்த ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்டுள்ள ஓடிடிக்கள்:
dream films, neon X vip, moodx, voovi, besharams, mojflix, yessma, hunters, hot shots vip, uncut adda, rabbit, fugi, tri flicks, xtramood, chikooflix, X prime, nuefliks, prime play.
வீடியோக்களின் உள்ளடக்கத் தன்மை:
முடக்கப்பட்டுள்ள ஓடிடிக்களில் வெளியான வீடியோக்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், குடும்ப உறவு ஆகியவற்றை தொடர்புப்படுத்தி ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 மற்றும் 67A மற்றும் பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் சட்டம் 1986 ஆகிய சட்டங்களின் படி இந்த வீடியோக்கள் தடை செய்யப்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்த தடை செய்யப்பட்டுள்ள ஓடிடிக்களில் ஒரு ஓடிடியில் 1 கோடி முறைக்கு மேல் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற இரண்டு ஓடிடி-க்களில் 50 லட்சம் முறை வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓடிடி தளங்களின் சமூக வலைத்தள பக்கத்தை 32 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
இதையும் படிங்க: ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1லட்சம், வேலைவாய்ப்பில் 50% ஒதுக்கீடு - காங்கிரசின் அதிரடி உத்தரவாதம்!