நாக்பூர் : இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், தேநீர் கடை உரிமையாளருடன் உரையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சி குஜராத்தில் நாளை (மார்ச்.1) தொடங்குகிறது.
இதில் பங்கேற்பதாக பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் நகரில் சாலையோர டீ கடையில் பில்கேட்ஸ் ஒரு சாய் ப்ளீஸ் என்று கேட்டு டீ குடித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சாய் ப்ளீஸ் என்று கேட்கும் பில் கேட்ஸ் கடை உரிமையாளரின் தனித்துவமான டீ தயாரிக்கும் முறை ரசித்தவாறே, அவருடன் உரையாடி டீ பருகுவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
இது தொடர்பாக பில் கேட்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், "இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையை காணலாம். அதில் தேநீர் தயாரிப்பும் அடங்கும்" என்று வீடியோவை பகிர்ந்துள்ளார். பில் கேட்ஸ் தேநீர் அருந்திய கடையின் உரிமையாளர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.
டோலி சாய்வாலா என அழைக்கப்படும் அந்த நபர் தனது தனித்துவம் என்கிற பெயரில் செய்யும் செயல்கள் மற்றும் அவரது கடையின் தேநீர் தயாரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சமூக வலைதளங்களில் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பில் கேட்ஸ் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கையும் சந்தித்தார்.
இதையும் படிங்க : "விவசாய உரங்களுக்கு ரூ. 24ஆயிரம் கோடி, வீடுகளில் சூரிய மின் தகடுகள் பொருத்த ரூ.75 ஆயிரம் கோடி" - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!