திருவனந்தபுரம்: திருவோணம் பண்டியை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு லாட்டரி குலுக்கல் கேரள அரசின் சார்பில் புதன் கிழமை நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மெக்கானிக் அல்தாப் என்பவர் ரூ.25 கோடி பரிசு வென்றிருப்பது தெரியவந்துள்ளது.
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை பிற்பகல் திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் மாநில அரசின் சார்பில் நடைபெற்றது. குலுக்கல் நடைபெற்றது குறித்து பேட்டி அளித்த கேரள நிதி அமைச்சர் கேஎன்.பாலகோபால், "TG434222 என்ற எண் கொண்ட திருவோணம் லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைத்திருக்கிறது. இதனை கர்நாடகா மாநிலம் மைசூர் அருகில் உள்ள பாண்டவபுராவை சேர்ந்த சேர்ந்த அல்தாப் என்ற மெக்கானிக் வாங்கியுள்ளார். அவர், வயநாடுக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது சுல்தான் பாதேரி என்ற முகவரிடம் இருந்து வாங்கி இருக்கிறார்," என்று கூறினார். அல்தாப்புக்கு ரூ.25 கோடி பரிசு கிடைத்திருப்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன மெக்கானிக் அல்தாப்: திருவோணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைத்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆனதை அல்தாப் மற்றும் அவரது குடும்பத்தினரால் உண்மையில் நம்பமுடியவில்லை.
ஓணம் லாட்டரி பரிசு தொகையில் தமது நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவது என்று அல்தாப் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். எனவே பரிசு தொகையில் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்று திட்டமிட்டுள்ளார். மேலும் தம்முடைய மகளுக்கு திருமணம் செய்வதற்காகவும் திட்டமிடுகிறார். "15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகள் வாங்கி வருவதாகவும்,"அல்தாப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கேரள லாட்டரி சீட்டுகள் - யார் வாங்கலாம்? எங்கு வாங்கலாம்?
முதல் பரிசுக்கு உரிய லாட்டரி சீட்டு பனமரம் பகுதியில் அனிஷ் குமார் என்பவர் நடத்தி வரும் எஸ் ஜே லக்கி சென்டர் என்ற மாவட்ட லாட்டரி ஏஜென்சி மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து சுல்தா பாத்ரே பகுதியில் உள்ள என்.ஜி.ஆர்.லாட்டரீஸ் என்ற கடையை நடத்தி வரும் நாகராஜ் என்பவர் லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். இவரிடம் இருந்துதான் அல்தாப் முதல் பரிசு பெற்ற லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார். சுல்தான் பாத்ரே நகரில் நாகராஜ் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளார். முதல் பரிசு பெற்ற லாட்டரி டிக்கெட் ஒரு மாதத்துக்கு முன்பு விற்பனை செய்யப்பட்டதாக கூறினார்.
"பல்வேறு நபர்கள் என் கடைக்கு வந்து லாட்டரி சீட்டுகளை வாங்குகின்றனர். இதர மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் லாட்டரி சீட்டுகள் வாங்குகின்றனர். முதல் பரிசு பெற்ற டிக்கெட்டை யார் வாங்கினார் என்பது குறிப்பாக எனக்குத் தெரியவில்லை. முதல் பரிசு பெற்றவர் கண்டறியப்பட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது," என்று ஊடகங்களிடம் நாகராஜ் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 50 ஆண்டுகள் கழித்து அடித்த லாட்டரி.. 67 வயதில் கோடீஸ்வரரான பஞ்சாப் உழைப்பாளி.. சுவாரஸ்ய பின்னணி
இது குறித்து கருத்துத் தெரிவித்த அல்தாப், "லாட்டரியில் பரிசு பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மலையாளிகளுக்கும் , கேரள அரசுக்கும் எனது நன்றி," என்று கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த லாட்டரி குலுக்கலில் தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த மூவர் சேர்ந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது.
நால்வரில் ஒருவர் லாட்டரி டிக்கெட் வாங்கினாலும் அதிர்ஷ்டம் இல்லை: கேரளாவின் நிதித்துறை தகவலின்படி இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு 90 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு 71 லட்சம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பம்பர் பரிசு லாட்டரியை கடந்த ஆண்டு முதல் கேரள அரசு அறிமுகம் செய்திருக்கிறது. சராசரியாக கேரளாவில் நான்கு பேரில் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்குபவராக இருக்கிறார். எனினும் அவர்களில் யாருக்கும் ஓணம் சிறப்பு லாட்டரியில் முதல் பரிசு கிடைக்கவில்லை.
திருவோணம் லாட்டரி, டிக்கெட் விலை, பரிசு தொகைகள்: திருவோணம் பம்பர் லாட்டரி டிக்கெட் ஒவ்வொன்றும் ரூ.500க்கு விற்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.25 கோடி தரப்படுகிறது. இதில் 10 % ஏஜென்ட்களுக்கு தரப்படும். இதற்கிடையே 2ஆவது பரிசாக தலா ரூ.2 கோடி வீதம் 20 பேருக்கும், மூன்றாவது பரிசாக தலா ரூ.50 லட்சம் வீதம் 20 பேருக்கும் தரப்படுகிறது.