மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று பத்து நாட்கள் கடந்த நிலையில் முதலமைச்சர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்தது. இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று நேற்று பாஜக மையக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தேவேந்திர பட்நாவிஸ் 1970ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை கங்காதர்ராவ் பட்நாவிஸ் மகாராஷ்டிரா மேலவையில் நாக்பூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராக இருந்தவர் ஆவார். அவரது தாய் சரிதா பட்நாவிஸ் விதர்ப்பா ஹவுசிங் கிரெடிட் சொசைட்டியின் இயக்குநராக பணியாற்றியவர். தேவேந்திர பட்நாவிஸின் தந்தை கங்காதர்ராவ் பட்நாவிஸ் தமது அரசியல் குரு என, இப்போதைய மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சரான நிதின் கட்கரியைத்தான் குறிப்பிடுவது வழக்கம்.
இளம் மேயர்: தேவேந்திர பட்நாவில் தமது 22ஆவது வயதில் நாக்பூர் மாநகராட்சி கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1997ஆம் ஆண்டு நாக்பூர் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாக்பூர் மநகராட்சி வரலாற்றில் மிகவும் இளவயது மேயராக அவர் இருந்தார். 1999ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் நாக்பூர் தொகுதியில் இருந்து தேவேந்திர பட்நாவிஸ் வெற்றி பெற்றார். கடந்த 2013ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் பாஜக மாநிலத் தலைவராக தேவேந்திர பட்நாவிஸ் பதவி வகித்தார்.
இரண்டாவது இளம் முதலமைச்சர்: 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சராக ஆனார். மனோகர் ஜோஷிக்குப் பின்னர் பிராமண சமூகத்தில் இருந்து முதலமைச்சராக பதவி ஏற்றவர் தேவேந்திர பட்நாவிஸ். சரத்பவாருக்கு பின்னர் இரண்டாவது இளம் முதலமைச்சராக அவர் முதன்முறை பதவி ஏற்றார்.
இதையும் படிங்க: "செம்பரம்பாக்கம் ஏரி சம்பவம் வேறு; சாத்தனூர் அணை சம்பவம் வேறு" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன் முறையாக முதலமைச்சராக இருந்தபோது சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றினார். நாட்டிலேயே முதலாவதாக இந்த சட்டத்தை நிறைவேற்றிய மாநிலம் என்ற பெயரை மகராஷ்டிரா பெற்றது. மேலும் 22,000 கிராமங்களில் குடிநீருக்கான ஆறு லட்சம் கட்டமைப்புகளை உருவாக்கினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற கட்டமைப்பு பணிகளை கண்காணிப்பதற்கான வார் ரூம் ஒன்றை அவர் உருவாக்கினார். மும்பை-புனே இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம், நாக்பூர்-மும்பை விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றினார்.
முதலமைச்சராக மூன்றாவது முறை: முதல்முறை முதலமைச்சராக ஐந்து ஆண்டுகள் பூர்த்தி செய்த தேவேந்திர பட்நாவிஸ், இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆனால், மூன்று நாட்கள் மட்டுமே அவர் பதவியில் இருந்தார். அரசியல் காரணங்களால் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 2022ஆம் ஆண்டு துணை முதலமைச்சர் ஆன பின்னர், மகாராஷ்டிரா மாநிலம் தொழிலகங்கள் ஆதிக்கம் நிறைந்ததாக மாற்றும் வகையில் கட்டமைப்பு திட்டங்கள், பொருளாதாரக் கொள்கைகளை மேற்கொண்டார். இப்போது மூன்றாவது முறையாக தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
தேவேந்திர பட்நாவிஸின் மனைவி அம்ருதா பட்நாவிஸ் ஒரு வங்கி அதிகாரி ஆவார். அவர்களுக்கு திவிஜா பட்நாவிஸ் என்ற மகள் உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சமூக ஊடக தளங்களில் அதிகம் பின்தொடர்பவர்களை கொண்டிருப்பவர் தேவேந்திரபட்நாவிஸ். அவருக்கு எக்ஸ் தளத்தில் 59 லட்சம் பின்தொடர்பவர்களும், முகநூலில் 91 லட்சம் பின் தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 20 லட்சம் பின்தொடர்வோரும் உ்ளளனர். யூடியூப்பில் 11 லட்சம் சந்தா தாரர்களும், வாட்ஸ் ஆப் சேனலில் 55000 பின்தொடர்பவர்களும் உள்ளனர்.