லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டரை மர்ம நபர்கள் வைத்துள்ளனர். இன்று (செப். 22) காலை 8.10 மணிக்கு கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ்-க்கு சரக்கு ரயில் சென்று கொண்டு இருந்தது. சரியாக சரக்கு ரயிலானது பிரேம்பூர் ரயில் நிலையம் அருகே வந்த போது, ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.
இதனை அறிந்த ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். பின்னர் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் கேஸ் சிலிண்டரை தண்டவாளத்திலிருந்து அகற்றியுள்ளனர்.
#WATCH | Kanpur, Uttar Pradesh: Police personnel inspect the spot where a 5-litre empty gas cylinder was found on tracks just as a goods train was about to pass through, at Prempur Station earlier today. pic.twitter.com/6wdsrpAZKg
— ANI (@ANI) September 22, 2024
இது குறித்து போலீசார் கூறியதாவது, “தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்தது காலியான 5 லிட்டர் கேஸ் சிலிண்டர் ஆகும். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர். ரயில்வே தண்டவாளங்களில் இரும்பு ஆணி, எரிவாயு சிலிண்டர், சிமெண்ட் கற்கள், இரும்புக் கம்பி போன்றவற்றை வைத்து ரயிலை கவிழ்ப்பதற்கான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக செப்டம்பர் 8ஆம் தேதி, பிரயாக்ராஜில் இருந்து பிவானி நோக்கிச் சென்ற காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டது. ஆனால், ரயிலானது சிலிண்டர் மீது மோதியவுடன் சிலிண்டர் ஆனது தூக்கிவீசப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டாவதாக இதே போன்றதொரு சம்பவம் அரங்கேறி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உ.பி மெத்தை தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு!