தெலங்கானா: ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று (டிச.2) திங்கட்கிழமை சாலையில் வேகமாக வந்த லாரி, ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்த காய்கறி வியாபாரிகள் மீது மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்திற்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அளுர் பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது, சாலையில் சுமார் 50 பேர் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து வரும் லாரியை கண்ட வியாபாரிகள் அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஓடித் தப்பிப்பதற்குள் லாரி சிலரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
அதே வேகத்தில் சென்ற லாரி சாலை அருகில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றுள்ளது. மேலும், லாரி மரத்தின் மீது மோதியதில், மரத்தின் கிளைகள் லாரிக்குள் சென்றதால் ஓட்டுநர் இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும், லாரி மோதிய வேகத்தில் அந்த மரமே விழுந்துவிட்டதாகவும், அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் சம்பவ இடத்திலிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உதகையில் கனமழை: வீடு இடிந்து ஒருவர் உயிரிழந்த சோகம்!
இந்த விபத்தில், அளுரைச் சேர்ந்த ராமுலு, பிரேம் மற்றும் கானாபூரைச் சேர்ந்த சுஜாதா ஆகிய 3 நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த நபர்களை உடனடியாக மீட்டு செவெல்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உயிரிழந்த நபர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி ஜமீல் என்ற நபர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
రంగారెడ్డి జిల్లా చేవెళ్ల మండలం ఆలూరు స్టేజ్ వద్ద కూరగాయలు అమ్ముకునే వారిపైకి లారీ దూసుకెళ్లిన ఘటనపై ముఖ్యమంత్రి ఎ.రేవంత్ రెడ్డి గారు తీవ్ర దిగ్భ్రాంతి వ్యక్తం చేశారు. ఈ ఘటనలో మృతుల కుటుంబాలకు సీఎం సంతాపం తెలియజేశారు. క్షతగాత్రులకు మెరుగైన వైద్యం అందించాలని అధికారులను…
— Telangana CMO (@TelanganaCMO) December 2, 2024
முதலமைச்சர் இரங்கல்:
தற்போது, லாரி மோதி 4 பேர் உயிரிழந்த இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், உயிரிழந்தவர்களின் குடுமத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், காயமடைந்து செவெல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அன்றாடம் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் மீது தாறுமாறாக ஓடிய லாரி இடித்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதி வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.