தெலங்கானா: இந்தியாவில் 18 ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் முதல் மொத்தம் ஏழஉ கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று (மே 13) தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 4 ஆவது கட்டமாக வாக்கு பதிவுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
அதன்படி அம்மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 9 மணி நிலவரப்படி அங்கு 9.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ், பாஜக மற்றும் பிஆர்எஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அம்மாநில மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
அதிகபட்சமாக வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் அதிலாபாத் மக்களவை தொகுதியில் 13.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதனை அடுத்து சகீராபாத் தொகுதியில் 12.88 சதவீதமும், நலகொண்டா தொகுதியில் 12.8 சதவீதமும் கம்மம் தொகுதியில் 12.24 சதவீதமும் மஹபூபாபாத் தொகுதியில் 11.94 சதவீதமும் பதிவாகியுள்ளது.
தெலங்கானாவில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 73,000 போலீசார், 500 மாநில சிறப்பு போலீஸ் பிரிவுகள், 164 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார், 3 கம்பெனி தமிழக போலீசார், 2,088 இதர துறை அதிகாரிகள் மற்றும் 7,000 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.