குல்லு : 2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், உலகின் மிக உயரமான வாக்குப்பதிவு மையமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள டசிகங் தேர்தல் திருவிழாவை எதிர்நோக்கி உள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள டசிகங்கில், உலகின் மிக உயரமான வாக்குப்பதிவு மையம் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இந்த வாக்குப்பதிவு மையம் உள்ளது. வரும் மக்களவை தேர்தலில் இந்த டசிகங் வாக்குப்பதிவு மையத்தில் மூன்றாவது முறையாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதல் முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு டசிகங் மையத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதை தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு மக்களவை இடைத் தேர்தலின் போது இங்கு மீண்டும் வாக்குப்பதிவு மையம் நிறுவப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது மூன்றாவது முறையாக இங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 52 வாக்காளர்களை கொண்ட டசிகங்கில் 30 பேர் ஆண் மற்றும் 22 பெண் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நடைபெறும் நிலையில், தற்போது ஒரு மீட்டர் அளவுக்கு பனி சூழ்ந்து காணப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி டசிகங்கில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை நடத்துவது என்பது சிரமமான காரியம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது 45 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 52 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை நடந்த மூன்று மக்களவை தேர்தல்களிலும் டசிகங் வாக்குப்பதிவு மையத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3 மக்களவை தேர்தலை தவிர்த்து கடந்த ஆண்டு நடைபெற்ற இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் டசிகங்கில் மாநில தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு மையம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தெலங்கானாவில் 3வது தமிழர் ஆளுநராக பொறுப்பேற்பு! ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!