சென்னை: கடந்த சில நாட்களாக 'கேரளா மெகா மில்லியன் லாட்டரி', கேரளா சம்மர் சீசன் தமாகா என்ற பெயர்களில் போலியான இணைய வழி லாட்டரி டிக்கெட் மோசடி நடந்துள்ளதாகக் கூறி கேரள காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த போலியான இணையவழி லாட்டரி டிக்கெட் மோசடியினர், கேரள அரசு புதிதாக ஆன்லைன் லாட்டரியைத் தொடங்கியுள்ளது எனவும், அதை பெற அவர்கள் வைத்திருந்த செயலி மூலம் அனுக வேண்டும் என வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளனர். இந்த விளம்பரங்களில் தற்போது 40 ரூபாய் செலுத்துபவர்கள் வருங்காலத்தில் 12 கோடி ரூபாய் வரை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆசை வார்த்தையால் பலர் தங்களது பணத்தை இழந்து போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில் இந்த இணையவழி லாட்டரி டிக்கெட் பெறுவதற்கு அந்த செயலியில் இருக்கும் வங்கிக் கணக்கிற்கு 40 ரூபாய் அனுப்பினால் போதுமாம், பின் உடனடியாக ஒரு போலியான இணையவழி லாட்டரி டிக்கெட்டை பணம் செலுத்தியவரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பப்படுகிறது. பின், அந்த இணைவழி லாட்டரி டிக்கெட்டின் கால அவகாசம் முடியும் நாளன்று, அதை வைத்திருக்கும் அனைவருக்கும் தங்கள் லாட்டரி டிக்கெட்டிற்கு ரூபாய் 5 லட்சம் கிடைத்துள்ளதாக கூறி, அரசு சார்பில் பேசுவதாக தொலைபேசியில் அழைத்துள்ளனர்.
தன்னை ஒரு அரசாங்கப் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பரிசுத் தொகையைப் பெற ஜிஎஸ்டி மற்றும் முத்திரைக் கட்டணம் என்ற பெயரில் பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறு கேட்டுள்ளனர். பின் டிக்கெட்டை வாங்கியவர்கள் பணத்தை மாற்றிய பிறகு, ரிசர்வ் வங்கி பரிசுத் தொகையை வைத்திருப்பதாகவும், பரிசை மாற்ற அதிக பணம் கோருவதாகவும் கூறி, டிக்கெட் வாங்கியவர்கள் நம்பும் வகையில் போலி ஆவணங்கள் மற்றும் வீடியோக்களை தயாரித்து அனுப்பி, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கேரள அரசு மோசடிக்காரர்களை விசாரணை செய்ததில் தெரியவந்துள்ளது.
எனவே, இதுபோன்ற நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேரள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிதி மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், உண்மையான லாட்டரி டிக்கெட் வாங்குவது குறித்து சில வழிமுறைகளையும், பலர் சந்தேகத்திற்கும் தீர்வாக சில கேள்விகளுக்கு கேரள போலீசார் விடையளித்துள்ளனர்.
கேரள லாட்டரி வாங்குவது எப்படி? முதலில் கேரள லாட்டரி டிக்கெட்கள் கேரளாவில் மட்டும்தான் விற்பனை செய்யக்கூடியவை. இதை வாங்க நினைப்பவர்கள் கேரள லாட்டரி துறையால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மூலம் பெரும்பாலான பொது இடங்களில் வாங்க முடியும். இந்த லாட்டரிச் சீட்டுகளை எந்த முகவரும் மாநிலத்திற்கு வெளியே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விற்க முடியாது. மேலும், ஒரு முகவர் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை விற்கவே முடியாது.
கேரளாவில் வசிக்காத ஒருவர் லாட்டரி வாங்க முடியுமா? கேரள மாநிலத்தைச் சேராதவர்கள் கேரளாவின் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கலாம், ஆனால் அவர்கள் கேரளாவுக்குச் சென்று அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து டிக்கெட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைனில் அல்லது அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை விற்பது அல்லது வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரள லாட்டரியில் வென்ற பணத்தை எவ்வாறு பெறுவது? பரிசு விழுந்ததாக கூறப்படும் ஒருவரின் லாட்டரிச் சீட்டை, குலுக்கல் முறை அனைத்தும் முடிந்து 30 நாட்களுக்குள் லாட்டரி துறை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பது மூலம் டிக்கெட்டின் உரிமையாளருக்கு பணம் தரப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: அடிச்சது பாருங்க லாட்டரி! கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு கேரள அரசு பரிசுத் தொகை அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?