பெங்களுரூ: கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கடசியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். லிகித் மற்றும் சேத்தன் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் லிகித் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் பிரீதம் கவுடாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான சேத்தன் அவரது அலுவலக பணியாளர் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்களை வெளியிட்ட விவகாரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நவீன் கவுடா, புட்டராஜூ ஆகியோரை தீவிரமாக போலீசார் தேடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர சிபிஐ மற்றும் இன்டர்போல் மூலம் சிறப்பு புலனாய்வு குழு ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. விரைவில் அவர் பிடிபடுவார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக ஆபாச வீடியோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய பாஜகவின் கோரிக்கையை நிராகரித்த முதலமைச்சர் சித்தராமையா, சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணையில் திருப்தி அளிப்பதாகவும் தொடர்ந்து மாநில காவல் துறையே வழக்கை விசாரிக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹசனி தொகுதியில் உள்ள ரேவண்ணாவின் பண்ணை வீட்டில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பெண் நிர்வாகியை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தது முதல் வீட்டில் பணியாற்றி வந்த இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது என பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு ஆஜாராகாமல் இருக்க பெண்ணை கடத்திய வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி. ரேவண்ணாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி எச்.டி ரேவண்ணா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் சிபிஐ விசாரணை அவசியமில்லை- சித்தராமையாவின் திட்டம் என்ன? - Karnataka MP Prajwal Revanna Case