பெங்களூரு: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று குஜராத், கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில், கர்நாடகாவில் மொத்தம் 28 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், ஏற்கனவே கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதில் மொத்தம் 227 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 206 ஆண் வேட்பாளர்களும், 21 பெண் வேட்பாளர்களும் இடம்பெற்றனர். இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மீதமுள்ள 14 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. சிக்கொடி, பெல்காம், பகல்கோட், பிஜப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர், பிடர், கொப்பல், பெல்லாரி, ஹவேரி, தர்வாட், உத்தர கன்னடா, தவாங்கரே, ஷிமோகா ஆகிய தொகுதிகளில் 2.59 கோடி பேருக்கு மேல் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
மொத்தம் 28,269 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளை பாஜக கைப்பற்றியது.
கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா இன்று தேர்தல் பாதுகாப்பு குறித்து பேசுகையில், "கிட்டத்தட்ட 1.45 தேர்தல் அலுவலர்கள் 14 தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களோடு 35,000 போலீசாரும், 65 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குழுவும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்" என கூறியுள்ளார்.
தவாங்கரே தொகுதியில் அதிகபட்சமாக 30 வேட்பாளர்களும், ஷிவமோகா தொகுதியில் 23 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதில் ஹவேரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பசவராஜ் பொம்மை, பெல்காம் தொகுதியில் போட்டியிடும் ஜகதீஷ் ஷெட்டர்(பாஜக), தர்வாத் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி(பாஜக), பிடார் தொதியில் போட்டியிடும் பகவான்த் கூபா (பாஜக), ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கீதா சிவராஜ்குமார், குல்பர்கா தொகுதியில் போட்டியிடும் ராதாகிருஷ்ணா தொட்டாமணி ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். இதனிடையே இன்று காலை 9 மணி நிலவரப்படி 14 தொகுதிகளில் 9.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: இன்று 3வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: எந்தெந்த தொகுதிகளில் யார்.. யார்.. போட்டி? முழு விபரம்! - Lok Sabha Election 2024