பெங்களூரு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தலைவர்கள் சிலருக்கு எதிராக, தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடைவிதித்து இன்று உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களில் ஒருவரான கர்நாடகா பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல், தங்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரான நளின் குமார் கட்டீல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தொடர்பான தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடைவிதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு வரும் அக்டோபர் 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
தேர்தல் நன்கொடை பத்திரம் திட்டம் தொடர்பான புகாரைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை அதிகாரிகள், பாஜகவின் மாநில மற்றும் தேசிய அளவிலான நிர்வாகிகள் சிலருக்கு எதிராக, பாரதிய நியாயா சன்ஹிதா பிரிவுகள் 384 (மிரட்டி பணம் பறித்தல்), 120-பி (குற்றவியல் சதி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: திருப்பதி லட்டு விவகாரம்: "ஆதாரம் எங்கே? கடவுள் விஷயத்தில் அரசியல் வேண்டாம்" - ஆந்திர அரசை சாடிய உச்ச நீதிமன்றம்
எஃப்ஐஆர்-ல் கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஜன அதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர்.அய்யர் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தல் பத்திரங்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம் பறித்ததாகவும், இதன் மூலம் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் மேலாக பலன் பெற்றதாகவும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை அதிகாரிகளின் ரகசிய உதவி மற்றும் ஆதரவின் மூலம் பாஜக மாநில மற்றும் தேசிய நிர்வாகிகளின் நலனுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மிரட்டி பறிக்க உதவினார் என்றும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் என்ற போர்வையில் பணம் பறிக்கும் கும்பல் முழுவதும் பாஜகவின் பல்வேறு மட்டங்களில் உள்ள நிர்வாகிகளுடன் கைகோத்து செயல்பட்டுள்ளதாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்தது. மேலும், அரசியலமைப்பின் படி, இத்திட்டமானது தகவல் அறியும் உரிமை மற்றும் பேச்சு, கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்