பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 25ஆம் தேதி முதற் கட்டமாகவும், மே 7ஆம் தேதி இரண்டாவது கட்டமாகவும் என இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 2 மணி நேர நிலவரப்படி பாஜக 16 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது, ஆளும் கட்சியான காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில், அங்கு இருமுனை போட்டி நிலவுகிறது. தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் கர்நாடக மாநிலமும் ஒன்று இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் 12 மணி நேர வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 16 இடங்களில் பாஜக முன்னணி வகிக்கிறது. மேலும், மண்டயா மற்றும் கோலார் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணியில் உள்ள ஜனதா தளம் முன்னணி வகித்து வருகிறது.
இந்நிலையில், கோலாரில் பாஜக- ஜனதா தளம் கூட்டணி வேட்பாளர் மல்லேஷ் பாபு 6 லட்சத்து 68 ஆயிரத்து 831 வாக்குகள் பெற்று முன்னணியில் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.கௌதம் 63 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். ஹசன் தொகுதியில் ஜனதா தளம் கட்சியின் எம்பியாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் களத்தில் இறங்கிய நிலையில், மதியம் 1.25 மணி நேர நிலவரப்படி காங்கிரஸின் ஷ்ரேயாஸ். எம்.படேல் 6 லட்சத்து 61 ஆயிரத்து 599 வாக்குகளை பெற்று பிரஜ்வல் ரேவண்ணாவை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார். பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் 6 நாட்கள் போலீஸ் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் கிராமப்புற மக்களைவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் டாக்டர் சி.என் மன்சூநாத் 8 லட்சத்து 64 ஆயிரத்து 628 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டிகே சிவக்குமாரின் தம்பியும், சிட்டிங் எம்பியுமான டிகே சுரேஷ் 1 லட்சத்து 90 ஆயிரத்து 576 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
அதேபோல் சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பி.என் சந்திரப்பாவை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் கோவிந்த் கரஜோல் 6 லட்சத்து 77 ஆயிரத்து 41 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பெல்காம் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் 3 லட்சத்து 50 ஆயிரத்து 194 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மிருணாள் ஆர் ஹெப்பல்கர் 61 ஆயிரத்து 444 வாக்குகளில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகள்: பாகல்கோட், பிஜப்பூர், ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடம், ஷிமோகா, உடுப்பி சிக்மகளூர், தட்சிண கன்னடம், சித்ரதுர்கா, தும்கூர், மைசூர், பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, சிக்கபல்லாபூர் என 16 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
காங்கிரஸ் முன்னணியில் இருக்கும் தொகுதிகள்: சிக்கொடி, குல்பர்கா, ராய்ச்சூர், பிதார், கொப்பல், பெல்லாரி, தாவணகெரே, ஹாசன், சாமராஜநகர், மத்திய பெங்களூர் என 10 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
ஜனதா தளம்: கோலார் மற்றும் மண்டயா தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. இதில் மாண்ட்யா தொகுதியில் ஏறத்தாழ எச்.டி குமாரசாமி வெற்றியை உறுதி செய்துவிட்டார்.
ஆதிக்கம் செலுத்தும் பாஜக: கர்நாடகா மக்களவைத் தேர்தலில் பாஜகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2009 முதல் 2019 தேர்தல் என இடைப்பட்ட காலத்தில் நடைப்பெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடித்தது. 2009 தேர்தலில் 19 இடங்களையும், 2014 தேர்தலில் 17 இடங்களையும், 2019 தேர்தலில் 25 தொகுதிகளையும் பிடித்தது. 2019 தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தை மற்றும் பெற்று அபார தோல்வியடைந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.